"அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள். மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று. ரோமர் 5:19,20 "
தேவன் வெறுமையாய் இருந்த இந்த பூமியில் ஐந்து நாட்களில் சகலவிதமான நீர் மச்சங்களையும், மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், புல் பூண்டுகளையும், வானத்தையும், பூமியையும், இருள் மற்றும் வெளிச்சம் எல்லாவற்றையும் உண்டாக்கி, ஆறாம் நாளில் தம்மை போலவே தம் ரூபத்தைப் போலவே மனிதனை உண்டாக்கினார். அவனுக்கு துணையாக மனுஷியையும் உண்டாக்கினார். அவர்களை ஏதேன் தோட்டத்தில் வைத்தார். அவனுக்கு எல்லாவற்றின் மேலும் சகல அதிகாரம் கொடுத்தார்.
மனிதனுக்கு தேவன் ஒரு கட்டளையை கொடுத்தார்,அதென்னவென்றால் சகல விருட்சத்தின் கனியை புசிக்கலாம் ஆனால் தோட்டத்தின் நடுவில் இருக்கும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்க கூடாது என்று கட்டளையிட்டார் அவர்களோ தோட்டத்தின் நடுவிலிருக்கும் விருட்சத்தின் கனியை புசித்து தேவனுடைய கட்டளையை மீறினார்கள்
"பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். 1 யோவான் 3:4"
இதனால் பாவம் அவர்களுக்குள் பிரவேசித்தது. இதனால் அவர்களை தேவன் ஏதேனிலிருந்து துரத்தி விட்டார். ஆதாம் ஏவாளினால் தொடங்கின பாவம், பெருகத் தொடங்கினது. அவர்கள் பிள்ளைகளையும் ஆட்கொண்டது. பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் ஆட்கொண்டது. பாவத்தோடு மனிதனை பிறக்கும் படியாய் செய்தது. பாவத்திலே வாழும்படியாய் செய்தது. பாவத்தில் மரிக்கும்படியாய் செய்தது.
- பாவத்தின் விளைவு
"பாவத்தின் சம்பளம் மரணம்;ரோமர் 6:23"
பாவத்தின் பலன் மரணம்; மரணம் என்றால் பிரிவினை
1. தேவனிடத்தில் இருந்து மனிதனை மரணம் பிரித்து விடுகிறது
"உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது. ஏசாயா 59:2"
பாவத்தோடு பிறந்து பாவத்தோடு வாழ்கிற மனிதன். ஒரு நாள் மரிக்கிறான். அவன் ஆத்துமா அவன் சரீரத்தை விட்டு பிரிகிறது இது முதலாம் மரணம்.
இந்த பூமியில் பிறந்த எவனும் இந்த மரணத்திலிருந்து தப்பிக்க முடியாது. பாவத்தோடு மரித்த(முதலாம் மரணம்) இந்த மனிதன் தான் செய்த பாவத்தின் நிமித்தமாக தேவனோடு சேர முடியாமல், பாவத்திற்கான நியாயத்தீர்ப்பைப் பெற்று இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே (நரகத்திலே) தள்ளப்படுகிறான். இதுவே தேவனிடத்தில் இருந்து மனிதனை பிரிக்கிற பாவத்தின் சம்பளமாகிய மரணம்.
2. பாவம் செய்கிற ஆத்மா சாகவே சாகும் தப்பித்துக் கொள்ள முடியாது.
3. பாவம் மனிதனுக்கு ஜீவிய காலமெல்லாம் மரண பயத்தை கொடுக்கும்.
பாவத்தின் பிடியில் இருக்கும் நம்மை விடுவிக்கும்படியாகவும், பாவத்தின் பலனாகிய மரணத்திலிருந்து நம்மை மீட்டு தம்முடன் சேர்த்து கொள்ளும்படியாகவும், பாவத்தினால் நம்மில் இருக்கும் மரண பயத்தை நீக்கும்படியாகவும், தம் ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை கொண்டு நம்முடைய பாவங்களை மன்னிக்கவும் தேவன் சித்தம் கொண்டார்.
" அன்பு திரளான பாவங்களை மூடும்.I பேதுரு 4:8 "
தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலமாக தமது அன்பை நமக்கு வெளிப்படுத்தினார். குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பிலே பாவம் இல்லை. புருஷனை அறியாத கன்னி மரியாளின் வயிற்றிலே அவர் ஜனிபிக்கப்பட்டார் குமாரனாகிய இயேசு கிறிஸ்து 33.1/2 ஆண்டு இந்த உலகத்தில் பாவம் இல்லாதவராக பாவம் செய்யாதவராக வாழ்ந்தார் பாவம் அறியாத ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோ நம்முடைய பாவ தண்டனையை அவர் ஏற்றுக் கொண்டார் நம்முடைய சிட்சையை அவர் ஏற்றுக் கொண்டார்.
நமக்காக அடிக்கப்பட்டார், துப்பட்டார்,குத்தப்பட்டார், மூன்று ஆணிகளால் சிலுவையில் தொங்கினார், பாவம் இல்லாதவராகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காக எல்லாவற்றையும் மௌனமாக சகித்து, கடைசி சொட்டு ரத்தம் வரை சிந்தி மரித்தார் பாவத்தின் பிராயச்சித்தத்தை முடித்தார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மரித்த மூன்றாம் நாள் தேவன் அவரை உயிரோடு எழுப்பினார்.
இந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து நம் பாவங்களை நாம் அவரிடத்தில் அறிக்கையிட்டால், அவர் நம் பாவங்களை மன்னித்து நம்மை தம் ரத்தத்தினால் கழுவி சுத்திகரிப்பார். நம் பாவத்திலிருந்து விடுதலை தருவார், மரண பயத்திலிருந்து நம்மை விடுவிப்பார், இரண்டாம் மரணத்திலிருந்து நாம் தப்புவிக்கப்படுவோம். இந்த தேகத்தை விட்டு பிரிந்து தேவனுடைய பிள்ளைகளாக அவரோடு கூட சதா காலமும் இருப்போம். ஆதாமில் இழந்த நம்மை தேவன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மூலமாக சேர்த்துக் கொள்கிறார்.
"அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள். மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று. ரோமர் 5:19,20 "
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் போது நாம் நம்முடைய பாவத்திலிருந்தும், தண்டனையிலிருந்தும், இரண்டாம் மரணத்திலிருந்தும், இரட்சிக்கப்படுவோம்.